திருவண்ணாமாலையில் கார்த்திகை தீப திருவிழா: டிசம்பர் 2ம்தேதி மகாதீபம்

Report Print Samaran Samaran in நிகழ்வுகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து 10 நாட்கள் காலையிலும் இரவிலும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். நிறைவாக டிசம்பர் 2ம்தேதி மாலை மகாதீபம் ஏற்றப்படும்.

அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக இறைவன் எழுந்தருளியதை கொண்டாடும் வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள், கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அப்போது அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பர். அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனியும், இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும்.

24ம்தேதி காலை தங்க சூரிய பிறை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 25ம்தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

26ம்தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும், 27ம் தேதி காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும், 28ம்தேதி காலை வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி தேரோட்டமும் நடைபெறும்.

29ம்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். அன்று ஒரே நாளில் காலை முதல் இரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து வலம் வரும். விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் அடுத்தடுத்து வீதி உலா வரும். இதில் உண்ணாமுலையம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள் என்பது தனிச்சிறப்பு.

30ம்தேதி காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலை பிச்சாண்டவர் உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனியும், டிச.1ம்தேதி ஒன்பதாம் நாள் காலை உற்சவத்தில் புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

விழாவின் நிறைவாக டிச. 2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. மகா தீபத்தை தரிசிக்க, சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்