கன்னங்கரா கிண்ணத்துக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கால்பந்தாட்டத் தொடரில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.
கொழும்பு கொறன தக்சிலா மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து வியாங்கொட தேசிய கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நெல்லியடி மத்திய கல்லூரி அணி 11ஆவது, 13ஆவது நிமிடங்களில் மிதுசனின் உதவியுடன் இரண்டு கோல்களைப் பதிவுசெய்தது.
இரண்டாவது பாதியாட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்தது.
இருப்பினும் ஆட்டம் நிறைவடைவதற்கு இரு நிமிடங்கள் இருக்கும் போது நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் மிதுசன் மீண்டும் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது.
நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் கம்பொல விக்கிரமபாகு மத்திய கல்லூரி அணியை நெல்லியடி மத்திய கல்லூரி அணி எதிர்கொள்ளவுள்ளது.