பாரீஸில் போராட்டக்காரர்கள் வன்முறை: மேக்ரான் அவசர ஆலோசனை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து பாரீஸில் போராட்டம் நடத்துவோர் வன்முறையில் இறங்கியதைத் தொடர்ந்து, G20 உச்சி மாநாட்டிலிருந்து அவசரமாக புறப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

பாரீஸிலுள்ள அதிபர் மாளிகையில் ஜனாதிபதி மேக்ரான் கூட்டிய அவசரக் கூட்டத்தில் பிரான்ஸ் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அவசர நிலை பிரகடனம் செய்யப்படவிருப்பதாக செய்திகள் உலவிய நிலையில், அப்படி ஒரு எண்ணம் தற்போதைக்கு அரசுக்கு இல்லை என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக மேக்ரான் பிரான்சின் புராதன நினவிடமாகிய Arc de Triompheஇல் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்தார்.

போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட கார்கள், சேதமடைந்த பொருட்கள் முதலானவற்றை பார்வையிட்ட மேக்ரான், பொலிசாருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில் மக்கள் கூட்டத்தில் சிலர் அவரை அவமதிக்கும் வகையில் குரல் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 412 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிசார், அவர்களில் 378 பேர் இன்னும் காவலில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் 263 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் 133 பேர் தலைநகரில் காயமடைந்தவர்கள் ஆவர். பாதுகாப்புப் படையினரில் 23 பேரும் காயமடைந்துள்ளனர்.

ஒருபோதும் வன்முறையை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அதிகாரிகள் தாக்கப்படுவதையோ, வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்படுவதையோ, பொதுமக்களோ பத்திரிகையாளர்களோ அச்சுறுத்தப்படுவதையோ புராதன கலைப்பொருட்கள் சேதப்படுத்தப்படுவதையோ எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்றார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers