பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையே வெடிக்கும் மோதல்: அதிரடி நடவடிக்கை எடுத்த பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சுக்கும் இத்தாலிக்கும் தொடர்ச்சியாக உரசல்கள் இருந்து வந்த நிலையில், தற்போது அது வெளிப்படையான மோதலாக வெடித்துள்ளதையடுத்து, பிரான்ஸ் இத்தாலிக்கான தனது தூதரை அதிரடியாக திருப்பி அழைத்துக் கொண்டுள்ளது.

அகதிகள் பிரச்சினை உட்பட இத்தாலிக்கும் பிரான்சுக்கும் இடையே பிரச்சினைகள் தொடரும் நிலையில், தொடர்ச்சியாக பிரான்ஸ் மீது இத்தாலி குற்றச்சாட்டுகளை முன் வைத்தபடியே இருந்தது.

மத்தியதரைக்கடலில் Aquarius என்ற படலில் நடுக்கடலில் சிக்கித் தவித்த 629 அகதிகளை தன் நாட்டுக்குள் அனுமதிக்காத இத்தாலியை, பொறுப்பற்றது என மேக்ரான் விமர்சிக்க, இத்தாலியோ, மேக்ரான், அகதிகள் பிரச்சினையை உருவாக்குவதாக குற்றம் சாட்டியது.

இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பிரான்சில் எரிபொருள் வரி அதிகரிப்பு மற்றும் பல விடயங்களை எதிர்த்து மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் நடத்தி வரும் போராட்டம் மேக்ரானின் பதவிக்கே உலை வைத்து விடலாம் என அச்சம் நிலவி வரும் நிலையில், இத்தாலியின் உள்துறை அமைச்சரான Matteo Salvini நேரடியாகவே மேக்ரானை தாக்கியுள்ளார்.

ஒரு பயங்கரமான அரசு மற்றும் ஜனாதிபதியின் கீழ் பிரான்சில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறியுள்ள Matteo Salvini, மே மாதம் நடக்கவிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்களில் மேக்ரானை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு வெளிப்படையாகவே பிரான்ஸ் வாக்காளர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இத்தாலியின் துணை பிரதமரான Luigi Di Maio, பாரீஸில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களை சந்தித்துள்ளார்.

போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் தலைவர்களையும் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் மஞ்சள் மேலாடை வேட்பாளர்களையும் சந்தித்துள்ளதாக Luigi Di Maio அறிவித்தார்.

அது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ள பிரான்ஸ், அதிரடியாக இத்தாலிக்கான தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.

கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும், அது வேறு என்று கூறியுள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், இரு நாடுகளுக்கிடையேயான உறவை தேர்தல் நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்திக் கொள்வது வேறு என்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers