கொலை செய்து விட்டு தப்பியவர், பேட்டி கொடுத்ததற்காக சிக்கிய சம்பவம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

86 பேர் கொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த ஒரு நாஸி வீரருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்ததற்காக அவர் தண்டிக்கப்பட இருக்கிறார்.

1944ஆம் ஆண்டு பிரான்சில் ஹிட்லர் எதிர்ப்பாளர்கள் சிலர் நாஸி வீரர்கள் வந்த ரயில் ஒன்றைக் கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் குண்டு வைக்க, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, 86 பிரான்ஸ் நாட்டு ஆண்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு நாஸி வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் அதிக வயதுடையவர் 75 வயதுடைய ஒரு முதியவர், குறைந்த வயதுடையவர் 15 வயது சிறுவன் ஒருவன்.

சில ஆண்டுகளுக்குப்பின் அந்த கொலைகார நாஸிக்களில் 17 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட வால்டர் ஹாக் என்பவனும் துப்பாக்கிச் சூட்டில் முக்கிய பங்காற்றிய கார்ல் மண்டர் என்பவனும் முக்கியமானவர்கள்.

முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், பின்னர் ஒப்பந்தம் ஒன்றின்படி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் மக்கள் அவர்களை கிட்டத்தட்ட மறந்துபோனார்கள். கொல்லப்பட்டவர்களின் மனைவிகளும் இறந்துபோனார்கள்.

ஆனால், 2013ஆம் ஆண்டு, நாஸிக்களால் கொல்லப்பட்டவர்களில் அதிக வயதுடையவரான நபரின் பேரப்பிள்ளைகளின் ஒருவரான Alexandre Delezenne இந்த வழக்கை மீண்டும் தொடங்கினார். பொலிசார் கொலையில் தொடர்புடையவர்களை தேடினார்கள்.

அப்போது ஜேர்மனியின் சாக்ஸனியில், கார்ல் மண்டர் என்ற பெயரில் நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஹெய்ன்ஸ் மண்டர் என்னும் முக்கிய குற்றவாளி சிக்கினான். ஆனால் அவனை தண்டிக்க முடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை இன்னொரு நாட்டில் தண்டிக்க முடியாது என்பதால், பிரான்சில் குற்றம் சாட்டப்பட்ட கார்ல் மண்டரை ஜேர்மனியில் தண்டிக்க முடியாது

86 பேரைக் கொன்ற வழக்கில் சிக்கியும் கார்லை தண்டிக்க இயலவில்லை.

ஆனால் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு கார்ல் அளித்த பேட்டி அவனை சிக்கவைக்கும் போலிருக்கிறது.

அந்த பேட்டியில், அத்தனை பேர் உயிரிழந்ததில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்று கூறிய கார்ல், தான் யாரையும் துப்பாக்கியால் சுடவில்லை என்றும், சுட உத்தரவு மட்டுமே கொடுத்ததாகவும் கூறினான்.

அதோடு நிறுத்தியிருந்தால் ஒருவேளை கார்ல் தப்பியிருப்பான். ஆனால் அவன், நான் ஒருவரை கைது செய்தால் அவருக்கு நான் பொறுப்பு, அவர் தப்பி ஓடினால் அவரை சுட எனக்கு உரிமை இருக்கிறது என்றும் அலட்சியமாகக்கூற, தற்போது வெறுப்பைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கார்ல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

86 பேரை கொன்றதற்கான தண்டனைக்கு தப்பிய கார்ல், வெறுப்பைத் தூண்டியதற்காக தண்டிக்கப்படும் நிலையில், அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி மெய்ப்படும் போலிருக்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers