பிரெக்சிட்: ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பயணிப்போருக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட்டுக்குப்பின் ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் தங்கள் செல்லப்பிராணிகளுடன் பயணிப்போர் நான்கு மாதங்கள் காத்திருக்க நேரிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரெக்சிட்டைப் பொருத்தவரையில் அடுத்து என்ன நடக்கும் என்பது உறுதியாக யாருக்குமே தெரியாது. ஆனால், ஜேர்மனியிலுள்ள பிரித்தானியர்கள் சில ஆயத்தங்களை முன்கூட்டியே செய்து கொள்ளவேண்டியுள்ளது.

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறுமானால், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பயணம் சிக்கலான ஒன்றாகிவிடும் என பிரித்தானிய அரசு எச்சரித்துள்ளது.

முக்கியமாக தங்கள் செல்லப்பிராணிகளுடன் பயணிப்போருக்கு இந்த எச்சரிக்கை செய்தி. நீங்கள் பிரெக்சிட்டுக்குப்பின் பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உங்கள் செல்லப்பிராணியுடன் பயணிக்கும்பட்சத்தில், உங்கள் பயணத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, உங்கள் கால்நடை மருத்துவரை நீங்கள் தொடர்புகொள்ளவேண்டும்.

உதாரணமாக நீங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஊருக்கு செல்ல விரும்பினால் இப்போதே அதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும்.

தற்போதைய செல்லப்பிராணிகள் பாஸ்போர்ட் திட்டத்தின்படி செல்லப்பிராணியுடன் பயணிப்பது எளிதான ஒரு விடயம்தான், ஆனால், இது ஒரு ஐரோப்பிய ஒன்றிய திட்டம். எனவே, பிரெக்சிட்டுக்குப்பின் இது பிரித்தானியாவுக்கு பொருந்தாது.

பிரித்தானியா அரசாங்கம் தற்போது அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவுக்குள் செல்லப்பிராணிகளைக் கொண்டுவர செல்லபிராணிகள் பாஸ்போர்ட்டை அனுமதிக்கும் என்று கூறியுள்ளது.

ஆனால் பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் செல்லும்போது செல்லப்பிராணிகள் பாஸ்போர்ட் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அது தெரிவித்துள்ளது.

ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமானால், செல்லப்பிராணியுடன் பயணிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து அது நீக்கப்படும். எனவே, செல்லப்பிராணியுடன் பயணிப்போர், புதிய விதிகளை பின்பற்றவேண்டியிருக்கும்.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவுக்கு நீங்கள் செல்வதென்றால், அது எளிது.

காரணம், இப்போதைக்கு பிரித்தானியா செல்லப்பிராணிகள் பாஸ்போர்ட்களை வழக்கம்போல ஏற்றுக்கொள்ளும் என்று கூறியுள்ளது.

உங்கள் செல்லப்பிராணிகளின் பாஸ்போர்ட் மற்றும் மைக்ரோசிப் தகவல்கள் எல்லையில் சரிபார்க்கப்படும்.

ஜேர்மனியிலிருப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, அவர்கள் ரேபிஸ் சோதனைக்குபிறகு பயணத்திற்காக காத்திருக்க வேண்டியது 30 நாட்கள் மட்டுமே (இந்த சோதனை ஜேர்மனியிலோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றிலோ செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம்).

உங்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால், உங்கள் செல்லப்பிராணி, விலங்குகள் காப்பகம் ஒன்றில் நான்கு மாதங்கள் வரை வைக்கப்படலாம் அல்லது கடல் மார்க்கமாக நீங்கள் பயணிக்க முடிவு செய்தால் உங்கள் செல்லப்பிராணி பயணிக்க மறுக்கப்படலாம். மேலும் அதற்கான கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்