மரம் வளர்க்க சூப்பரான ஐடியா சொன்ன அமைச்சர்!

Report Print Arbin Arbin in இந்தியா

மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியம் குறித்து மத்திய பிரதேச அமைச்சர் ஒருவர் செய்முறை காட்சியுடன் விளக்கியது கலகலப்பை ஏற்படுத்தியதுடன் மக்களை மிகவும் ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சராக இருப்பவர் அந்தர்சிங் ஆர்யா. இவர் வளவளவென பேசும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நறுக்கென பேசி மக்களை ஈர்ப்பவர்.

அவரது தொகுதி, மலைபிரதேசத்தில் அமைந்துள்ள சேந்தாவா. இங்கு காடு வளர்ப்பு குறித்த விழா ஒன்றில் கலந்து கொள்ள அந்தர் சிங் ஆர்யா வந்திருந்தார். அப்போது ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். காடு வளர்ப்பின் அவசியம் குறித்து அந்தர் சிங் ஆர்யா பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த இருவரை மேடைக்கு வரும்படி அழைத்தார். அதில் ஒருவருக்கு தலை நிறைய முடி இருந்தது. மற்றொருவருக்கு தலை வழுக்கையாக காணப்பட்டது.

மேடைக்கு வந்த இருவரின் தலையிலும் தண்ணீரை ஊற்றினார். பின்னர், இருவரையும் தலையை துவட்டச் செய்தார். கூடியிருந்த மக்களுக்கு எதுவும் புரியவில்லை.

ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனித்தனர். தலையை துவட்டியதும் வழுக்கை தலைக்காரரின் தலை சுத்தமாக காய்ந்து காணப்பட்டது. ஆனால், முடி உள்ளவரின் தலையில் ஈரம் காயவில்லை.

உடனே அமைச்சர் அந்தர்சிங், ‘‘இந்த வழுக்கை தலையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. தலைநிறைய முடி வைத்திருப்பதால், இவர் தலையில் தண்ணீர் இன்னமும் இருக்கிறது. இதுதான் விஷயம்.

கட்டாந்தரையாக இருந்தால் மழைநீர் வீணாகி விடும். நிறைய மரங்களை நடுங்கள். மரங்கள் அதிகமாகும் போது நிலத்தடி நீர் பெருகும். நாடு பசுமையாக இருக்கும்’’ என்று விளக்கினார்.

உடனே மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர். எல்லாம் சரிதான். வழுக்கைத் தலைக்காரர் தலையில் தண்ணீரை ஊற்றிய அமைச்சர் அந்தர்சிங்கிற்கும் தலை வழுக்கைதான். அவர் தலையில் தண்ணீரை ஊற்றி காட்டியிருக்கலாமே? என சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments