மாயாஜால வெற்றி: அதிமுகவின் முதல் நடவடிக்கை இதுதான்

Report Print Fathima Fathima in இந்தியா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் படுதோல்வியை அடைந்ததை தொடர்ந்து இன்று ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இதில் அதிரடி நடவடிக்கையாக டிடிவி தினகரனுக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களை பொறுப்பிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி மற்றும் வி.பி.கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தந்திரத்தால் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்டாலினும், தினகரனும் கூட்டுச்சதி செய்து இரட்டைஇலையை தோற்கடித்துள்ளனர்.

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இது தோல்வியே கிடையாது, மக்களை ஏமாற்றி மாயாஜால முறையில் தினகரன் பெற்ற வெற்றி என தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், என்னை அரசியலில் டிடிவி தினகரன் அறிமுகம் செய்ததாக கூறுவது பொய்யானது.

தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்து விட்டேன்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்தினால் உண்மை வெளியேவரும், நானும், எந்தவொரு அமைச்சரும் அப்பல்லோவில் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.

எங்களால் நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அவர்களை சொல்வதை கேட்டோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் 20 ரூபாய் நோட்டை காட்டி ஆர்.கே.நகர் மக்கள் பணம் கேட்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானதாகவும், தேர்தல் பற்றி விரிவான விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்