அரசியலுக்கு வருவது பற்றி டிசம்பர் 31ல் அறிவிப்பு: ரஜினிகாந்த்

Report Print Fathima Fathima in இந்தியா

அரசியலுக்கு வருவது பற்றிய தனது முடிவை டிசம்பர் 31ம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தனது ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

கடந்த மே மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களைச் சந்திப்பது தள்ளிப்போனது.

இந்த நிலையில், மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களை இன்று முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.

முதல் நாளான இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்துவருகிறார்.

இதன்போது பேசிய ரஜினிகாந்த், காலா படத்தின் படப்பிடிப்பு, மழை, மனம், சரியாக இல்லாத காரணத்தினால் மீதமுள்ள ரசிகர்களை சந்திப்பது தள்ளிப்போனது,

கடந்த 28-30 ஆண்டுகளாக என்னுடைய பிறந்த நாளின்போது வீட்டில் இருப்பதில்லை, தனியாக இருக்க வேண்டுமென விரும்பினேன்.

இந்த முறை என்னுடைய வீட்டின் அருகில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடினர், அவர்கள் ஏமாற்றமடைந்ததற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலில் இருக்கும் கஷ்ட - நஷ்டங்கள் தெரிந்திருப்பதால்தான் தயங்குகிறேன், யுத்தத்திற்கு சென்றால் வெற்றி பெற வேண்டும், இதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகம் தேவை என்று குறிப்பிட்டார்.

மேலும் 31ம் திகதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார், அப்போது ஆரவாரம் செய்த ரசிகர்களை நோக்கி அரசியலுக்கு வருகிறேன் என கூறவில்லை, அரசியல் குறித்து அறிவிக்க மட்டுமே போகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்