கடைக்குள் பாய்ந்த கார்... மயிரிழையில் உயிர் தப்பிய இரு குழந்தைகள்: ஒரு திடுக் வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

துருக்கியில் கார் ஒன்று கடை ஒன்றின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கடைக்குள் பாய, அந்த கடைக்கு முன் நிற்கவைக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பும் காட்சி வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் Gaziantep என்ற இடத்திலுள்ள கடை ஒன்றின் முன் மூன்று பேர் நின்றுகொண்டிருக்க, அவர்கள் அருகே தள்ளுவண்டியில் ஒரு குழந்தையும், அதன் அருகில் ஒரு சிறுமியும் நின்றுகொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அந்த கடை மீது மோதியுள்ளது.

அதில் கடைக்கு முன் நின்ற மூன்று பேரும் கடையின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கடைக்குள் சென்று விழுந்துள்ளனர்.

ஆனால், அதிசயிக்கும் வண்ணமாக அந்த குழந்தை இருந்த தள்ளு வண்டி மீதோ, அதன் அருகில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீதோ கார் மோதவில்லை.

இந்த திகிலூட்டும் விபத்தைக் காட்டும் வீடியோவில், சில நெகிழவைக்கும் காட்சிகளையும் காணமுடிகிறது.

முதலில், கார், கடையில் மோதியதும், பதறி விலகி ஓடிச்சென்ற சிறுமி, தள்ளுவண்டியிலிருந்த குழந்தைக்கு என்ன ஆயிற்று என காண மீண்டும் ஓடி வருவதையும், ஒருவர் ஓடோடிச் சென்று அந்த குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவதையும் காணமுடிகிறது.

மேலும், கார் மோதியதும், காரிலிருந்தவரை அடிக்க ஓடாமல், அவரைக் காப்பாற்ற மக்கள் ஓடுவதையும் காணலாம்.

அத்துடன், கடை கண்ணாடியில் கார் மோதியதால், உடைந்த கண்ணாடி மற்றும் பொருட்களுக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஒருவரை, தான் தடுமாறிய நிலையிலும், சுதாரித்துக் கொண்டு, சற்றும் யோசிக்காமல் ஒரு பெண் உடனடியாக மீட்க முயல்வதையும் காணமுடிகிறது.

ஒருவேளை இப்படிப்பட்ட நல்லவர்கள் இருப்பதால்தான் அந்த குழந்தைகள் உட்பட யாருக்குமே உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது அந்த வீடியோவைப் பார்க்கும்போது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்