பாகிஸ்தானுக்கு செல்வதற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்: 11 பெண்களுக்கு நேர்ந்த கதி! கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயரம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
100Shares

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பெண்கள் பலியான சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல ஆப்கானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் உறவினர்களைப் பார்க்க, மருத்துவ சிகிச்சை பெற, வேலை தேட அல்லது தங்கள் நாட்டில் நடந்து வரும் வன்முறைகளில் இருந்து தப்பிக்க அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பயணம் செய்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏழு மாத இடைநிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பயணிப்பதற்கான விசா விண்ணப்பங்கள் ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

நீண்ட நாள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு விசா சேவை மீண்டும் தொடங்குவதால் ஏராளமான விண்ணப்பதாரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், வழக்கமான விசா மையத்திற்கு பதிலாக கூட்டத்தை அருகிலுள்ள கால்பந்து மைதானத்திற்கு செல்ல அறிவுறுத்தியது.

பாகிஸ்தான் விசாவிற்கு விண்ணப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்தில் கூடிய நிலையில் இந்த துயரம் நிகழ்ந்ததாக மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விசா விண்ணப்பதாரர்கள் தூதரக அதிகாரிகளிடமிருந்து தங்கள் டோக்கனைப் பெறுவதற்காக விரைந்து சென்றனர், கூட்டம் கட்டுப்பாட்டை மீறி நெரிசலுக்கு வழிவகுத்தது என்று ஜலாலாபாத்தில் உள்ள ஒரு அதிகாரி கூறினார்.

ஆப்கானிஸ்தானின் பழமைவாத முஸ்லீம் சமுதாயத்தில், பெண்களும் ஆண்களும் தனித்தனியாக வரிசையில் நிற்பது பொதுவானது.

இந்த கூட்ட நெரிசலில் மேலும் பல பெண்கள் மற்றும் வயதானவர்களும் காயமடைந்துள்ளனர் என்று கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்