தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை.. கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்று திடீரென மரணம் அடைந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 57 வயதான சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. சந்திரசேகர் தனது மைலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதை சென்னை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மறைந்த வி.பி.சந்திரசேகருக்கு சவுமியா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 88 ஓட்டங்கள் எடுத்துள்ளார் சந்திரசேகர். அவர் தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 ஆட்டங்களில் விளையாடி, 4,999 ஓட்டங்கள் குவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் 56 பந்தில் சதம் அடித்ததும் அடங்கும். தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்தபோது சந்திரசேகர் இந்திய அணியின் தேசிய தேர்வாளராக இருந்தார், மேலும் பிற்காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் வர்ணனையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று இரவு விபி சந்திரசேகர் தனது அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும், சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். வி பி சந்திரசேகரின் மறைவுக்கு ஜம்பவான் சச்சின், இந்திய வீரர்கள் ரெய்னா, ஹர்பஜன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்