பத்திரிகையாளர் கொலை விவகாரம்: சவுதி தொடர்பில் முக்கிய முடிவெடுத்த சுவிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சவுதி அரேபியாவுக்கு இனிமுதல் ஆயுதங்கள் வழங்குவதில்லை என சுவிஸ் அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வழங்குவதாக உறுதி அளித்திருந்த ஆயுத உதிரி பாகங்கள் தொடர்பில் இந்த முடிவு பொருந்தாது எனவும் பெடரல் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் André Simonazzi தெரிவித்துள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் பரிசீலனையில் உள்ள கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சவுதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு உரிமம் பெற்றுள்ள சுவிஸ் நிறுவனமானது அதை பயன்படுத்தாது என உறுதியளித்ததாகவும் அவர் குறுப்பிட்டுள்ளார்.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில்லை என கடந்த வாரம் கூடிய பெடரல் கவுன்சில் முடிவெடுத்திருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் உதிரி பாகங்களை சுவிஸ் ஏற்றுமதி செய்து வருகிறது.

தற்போதுள்ள சூழலில், ஆயுதங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை சவுதி அரேபியா தனிப்பட்ட விவகாரங்களுக்காக பயன்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், கவலை அளிப்பதுமாக உள்ளது என André Simonazzi தெரிவித்துள்ளார்.

யேமன் கிளர்ச்சியின்போது கடந்த 2016 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கான ஆயுத ஏற்றுமதிக்கு நிபந்தனைகள் விதித்திருந்தது.

அப்போது முதல் சவுதி அரேபியாவின் பெரும்பாலான கோரிக்கைகளை சுவிஸ் நிராகரித்து வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவுதி அரேபியாவை பொறுத்தமட்டில் யேமன் கிளர்ச்சிக்கு பயன்படுத்தாத ஆயுத உதிரி பாகங்களை மட்டுமே ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் காசோகி விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ள André Simonazzi, குற்றவாளிகள் எவராக இருந்தாலும் சட்டத்தின்முன் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என பெடரல் கவுன்சில் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்