சுவிட்சர்லாந்தில் சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளை: பரபரப்புச் சம்பவம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பணம் கொண்டு சென்ற இரண்டு வாகனங்களை துப்பாக்கி முனையில் கைப்பற்றிய கொள்ளையர்கள் ஒரு வாகனத்தில் இருந்த பணம் முழுவதையும் கைப்பற்றினர்.

நேற்று பிற்பகல் 3.10 மணிக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் இரண்டை பின் தொடர்ந்த பல வாகனங்கள், அந்த வாகனங்கள் இரண்டையும் சாலையிலிருந்து ஓரங்கட்டியுள்ளன.

இந்த சம்பவம் லாசேனுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் நெடுஞ்சாலை சந்திப்பு ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

அப்போது ஒரு வாகனம் வகையாக சிக்கிக் கொள்ள, மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் ஒரு வழியாக வாகனத்துடன் தப்பிவிட்டார்.

மற்ற வாகனத்தின் ஓட்டுநரும் உடன் இருந்தவர்களும் இயந்திரத் துப்பாக்கி சகிதம் வந்த கொள்ளையர்களிடம் சிக்கிக்கொள்ள, அவர்களை கடுமையாக அடித்து உதைத்து, வாகனத்திலிருந்த பணம் முழுவதையும் தங்கள் வாகனங்களில் ஒன்றில் ஏற்றிய கொள்ளையர்கள், அங்கிருந்த வாகனங்கள் அனைத்தையும் தீ வைத்து கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

வழியில் பல கார்கள் மாறிய கொள்ளையர்கள் தாங்கள் விட்டுச்சென்ற கார்கள் அனைத்தையுமே கொளுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களால் தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார்கள், எத்தனை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன என்னும் தகவல்கள் இதுவரை தெரியவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்