பிரித்தானிய பிரதமரின் அலட்சியத்தால் தரையில் சரிந்த பொலிஸார்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஒருமணி நேரம் தாமதமாக வந்ததால், நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்த பொலிஸ் பயிற்சியாளர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே தரையில் சரிந்துள்ளார்.

வேக்ஃபீல்டில் உள்ள ஒரு பொலிஸ் பயிற்சி அகாடமியில் பொலிஸ் ஆட்சேர்ப்பு குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றுவதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜான்சன் மாலை 4 மணிக்கு பேச திட்டமிடப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் கூட பிரதமர் நிகழ்ச்சிக்கு வருகை தரவில்லை. அவர் வரும்வரை பொலிஸ் பயிற்சியாளர்கள் அனைவரும் வெயிலில் காத்துக்கொண்டிருந்தனர்.

இதனால் அவர்கள் ஏற்கனவே சோர்ந்து போய் இருக்க, ஜான்சன் இறுதியாக மாலை 5.18 மணியளவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக மேடைக்கு வந்தார்.

அவரது நீண்ட நேர உரையில் பொலிஸார் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையாக கூற முற்பட்டார். ஆனால் அதற்குள் அவருடைய பின்பக்கத்தில் சோர்வாக நின்றுகொண்டிருந்த பொலிஸ் பயிற்சியாளரில் ஒருவர், நிற்க முடியாத நிலையில் தலையில் கைவைத்தபடியே தரையில் சரிந்தார்.

இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட, ஜான்சன் அவருக்குப் பின்னால் சென்று பயிற்சியாளர் நலம்தானே என கேட்டுவிட்டு, வேறு எதைப்பற்றியும் விசாரிக்காமல் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

பிரதமரின் இத்தகைய செயலை இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்