இன்று இரவு 11 மணிக்கு, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக வெளியேறிவிடும்!
2016 முதல் உச்சரிக்கப்பட்டு வந்த பிரெக்சிட் என்னும் வார்த்தை முழுமையான அர்த்தத்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், அதாவது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக வெளியேறிவிடும் பட்சத்தில், அது பிரித்தானியர்களின் அன்றாட வாழ்வில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்.
கல்வி
பிரித்தானிய மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பின்போது ஐரோப்பிய நிறுவனங்களில் ஓராண்டு கல்வி கற்கும் திட்டமான Erasmus scheme என்னும் திட்டத்தில் இனி பிரித்தானியா பங்கேற்காது. ஆனால், அதற்கு பதிலாக, 2021 செப்டம்பரில் ‘Turing Scheme’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வேலை
இனி பிரித்தானிய குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்வும் பணி செய்யவும் முன்பிருந்த அதே உரிமை இனி கிடையாது. அது அந்தந்த நாட்டின் புலம்பெயர்தல் விதிகளுக்கேற்ப மாறுபடும்.
பிரித்தானிய தொழிற்கல்வி தகுதிகள் இனி அந்த நாடுகளில் அங்கீகரிக்கப்படாத நிலை ஏற்படலாம்.
பாஸ்போர்ட்கள்
இப்போதிருக்கும் burgundy நிற ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட்கள் செல்லும்படியாகும் என்றாலும், பிரித்தானிய பயணிகள் முன்போல் ஐரோப்பிய ஒன்றிய விமான நிலையங்களில் fast track e-gates முறையை பயன்படுத்தமுடியாது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐஸ்லாந்து, Liechtenstein, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களின் பாஸ்போட்ர்கள் குறைந்த பட்சம் ஆறு மாதகாலம் செல்லுபடியாகும் நிலையில் இருக்கவேண்டும்.
அத்துடன், பயண நாளன்று பார்க்கும்போது, அது பத்தாண்டுகளுக்கு மேல் பழமையானதாக இல்லாமலிருக்கவேண்டும்.
பயணம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, 180 நாட்களில் 90 நாட்களுக்கு அதிகமாக விசா வழங்கப்படாது. ஐரோப்பிய ஒன்றிய விசா விதிவிலக்குக்கு ஆளுக்கு 6 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். இது மூன்று ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.
Duty free
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கொண்டுவரப்படும் 390 பவுண்டுகள் மதிப்பிலான பொருட்களுக்கு மட்டுமே இனி வரி கிடையாது.
வாகனம் ஓட்ட அனுமதி
பழைய காகித ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் தவிர மற்றவர்கள், சர்வதேச ஓட்டுநர் உரிமம் இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தில் வாகனங்களை ஓட்டலாம்.
தங்கள் சொந்த கார்களை ஓட்டி செல்பவர்கள், தங்கள் காப்பீட்டாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட ‘green card’ வைத்திருக்கவேண்டும்.
மருத்துவக் காப்பீடு
ஐரோப்பிய மருத்துவக் காப்பீடு அட்டை திட்டம் (EHIC) முடிவுக்கு வர உள்ளது, என்றாலும், அவை காலாவதியாகும் வரை பயன்படுத்தப்படலாம்.
செல்லப்பிராணிகள்
ஐரோப்பிய ஒன்றிய செல்லப்பிராணிகள் பாஸ்போர்ட் திட்டம் முடிவுக்கு வருகிறது, அதற்கு பதிலாக செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் விலங்குகள் நல சுகாதார சான்றிதழ் ஒன்றை பெற வேண்டியிருக்கும்.
அதற்கான கட்டணம், பயணம் ஒன்றிற்கு 100 பவுண்டுகள் வரை ஆகலாம்.
தபால் சேவை
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொருட்களை அனுப்புவதற்கு, தபால் நிலையத்திலிருந்து சுங்க அனுமதிக் கடிதம் ஒன்றை பெறவேண்டியிருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பொருட்களை பெறும் பிரித்தானியர்கள் இனி duty, VAT மற்றும் பிற கட்டணங்கள் செலுத்தவேண்டியிருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓய்வு பெறுதல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓய்வு பெற, இனி விசா மற்றும் தங்களைத் தாங்களேபொருளாதார ரீதியாக கவனித்துக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்யும் ஆதாரம் ஆகியவை தேவை. அதே நேரத்தில் பிரித்தானிய ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும்.
வட அயர்லாந்தின் நிலை
வட அயர்லாந்தைப் பொருத்தவரை, சில சூழல்களின் அடிப்படையில், வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகத்தான் கருதப்படுகிறது என்பதால், அதன் குடிமக்கள் சில விதிகளிலிருந்து தப்பிக்கொள்ளலாம்!