துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதரவற்ற ஒரு பெண்: ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க நகரம் ஒன்றிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது உயிரிழந்த, உறவினர்கள் யாருமற்ற ஒரு பெண்ணுக்கு அஞ்சலி செலுத்த ஊரே கூடி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

El Paso நகரைச் சேர்ந்த Antonioவின் மனைவி Margie, பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது உயிரிழந்த 22 பேரில் ஒருவர்.

தம்பதிக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தன் மனைவியின் இறுத்திச்சடங்கில் கலந்து கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார் Margieயின் கணவரான Antonio.

Margieயின் இறுதிச்சடங்கு நடந்த அன்று வெயில் 100 டிகிரியாக சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

ஆனால் Margieயின் இறுதிச்சடங்கிற்கு வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் குவிய ஆரம்பித்தார்கள்.

100பேர், 200 பேர் கூட இல்லை, Margie யாரென்றே தெரியாத 700பேர், அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள்.

மிக நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவராக அவருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, Antonioவைக் கட்டியணைத்து அவருக்கு ஆறுதலும் கூற நெகிழ்ந்து போனார் அவர்.

உள்ளூர் பூக்கடைக்காரர் ஒருவர் மலர் அலங்காரம் செய்ய, அது போதாதென்று வந்தவர்களெல்லாம் ஆளுக்கொரு மலர்ச்செண்டாக கொண்டு வந்து அந்த பகுதியையே பூக்களால் நிறைத்து விட்டார்கள்.

Margieக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில், வெகு தொலைவிலிருந்து விமானம் ஏறி வந்தவர்களும் உண்டு, யாரென்றே தெரியாத ஒருவருக்கு அஞ்சலி செலுத்த எங்கிருந்தெல்லாமோ வந்தவர்களைக் கண்டு நெகிழ்ந்து போய் அஞ்சலி செலுத்த வந்த உள்ளூர் மக்களும் உண்டு.

வந்த மக்களுக்கு இடமில்லாததால், வசதியான ஒரு பெரிய இடத்துக்கு அஞ்சலி நிகழ்ச்சி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்