விக்ரம் லேண்டர் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி? தமிழன் சண்முக சுப்ரமணியம் சிறப்பு பேட்டி

Report Print Fathima Fathima in அமெரிக்கா

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த 33 வயது சண்முக சுப்ரமணியம் நாசா விண்கலன் எடுத்த புகைப்படங்களின் உதவியோடு நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை அடையாளம் கண்டுள்ளார்.

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலனை செலுத்தியது. இதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கும் கலன், கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மென்மையாக தரையிறங்குவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்திருந்தது.

ஆனால், சவாலான இந்த பணி தோல்வியில் முடிந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு சற்று முன்பாக விக்ரம் லேண்டருன் தொடர்பை இழந்தது இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையம். காணாமல் போன விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்று இஸ்ரோ மட்டுமல்லாமல், நாசாவின் நிலவு ஆராய்ச்சி விண்கலனும் ஆராய்ந்து வந்தன. விக்ரம் லேண்டர் விழுந்திருக்க வாய்ப்புள்ள இடத்தின் படக்கோவைகளை நாசா செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டது.

அந்த படங்களில் இருந்து தற்போது விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் அடையாளம் காணப்பட்டன என்று நாசாவின் அதிகாரபூர்வ இணைய தளம் செய்தி வெளியிட்டது. அதில் இந்தப் பாகங்களை அடையாளம் கண்டவர் சண்முக சுப்ரமணியன் என்பதையும் குறிப்பிட்டு அங்கீகரித்துள்ளது.

நாசாவின் இந்த செய்தி மூலம் தற்போது உலக அளவில் பிரபலமாகியுள்ள சண்முக சுப்ரமணியன் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டி:

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி?

விக்ரம் லேண்டரின் சிறியதொரு உடைந்த பாகத்தை மட்டுமே நான் கண்டறிந்தேன். நான் கண்டறிந்த இடத்திற்கு மேலேயும், நான் சொல்லியிருந்த இடத்திற்கு உள்ளேயும், சுற்றியும் நாசா தேடியுள்ளது. விக்ரம் லேண்டரின் பல உடைந்த பாகங்களையும், நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் விழுந்ததால் நிலவின் தரைப்பரப்பில் தாக்கம் ஏற்பட்ட பகுதியையும் நாசா கண்டறிந்துள்ளது.

பிக்சல், பிக்சலா நீங்கள் கண்டறிந்தீர்களா, அது எப்படி?

நாசாவிடம் புகைப்படங்கள் உள்ளன. விக்ரம் லேண்டிங் ஆன இடம் பற்றி எனக்கு தெரியும். லேண்டிங் செய்த இடத்தின் வடக்கில் இரண்டு சதுர கிலோமீட்டருக்கு இரண்டு சதுர கிலோமீட்டர் பகுதியை ஆய்வு செய்தேன். விக்ரம் லேண்டர் சென்றபோது கடைசியாக அடையாளம் காணப்பட்ட இடத்துக்குப் பக்கத்தில்தான் அது விழுந்திருக்க முடியும் என்பது நமக்கு தெரியும்.

எனவே, இந்த இடத்தை பிக்சல் பிக்சலாக ஆய்வு செய்தேன். ஒரு பிக்சல் என்றால் சுமார் 1.25 மீட்டராகும். விக்ரம் லேண்டர் மிகவும் சிறியது. எனவே, ஒவ்வொரு பிக்சலையும் சோதித்து வேண்டியிருந்தது.

இவ்வாறு சோதித்தபோது, அப்பகுதியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் கண்டறிய முடிந்தது, பின்னர், அது பற்றி நாசாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

இதனை கண்டுபிடிக்க உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

சந்திரயான்-2 ஏவப்படுவதை தொடக்கத்தில் இருந்தே நான் பார்த்தேன். எனவே, தொடக்கத்தில் இருந்தே இந்த ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வமே இத்தகைய சோதனையை மேற்கொள்ள தூண்டியது.

யார் இந்த சண்முகம் சுப்ரமணியம்?

"அடிப்படையில் நான் ஓர் இயந்திரவியல் பொறியியலாளர் (மெக்கானிக்கல் எஞ்ஜினியர்). தகவல் தொழில்நுட்ப துறை பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சென்னையில் வேலை செய்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போது, இணைய தளங்களை, செயலிகளை (ஆப்) வடிவமைப்பதில் ஈடுபடுகிறேன். என்னுடைய சில ஆப்-கள் பற்றி டெக்கிரன்ச், நியூ யார்க் டைம்ஸ் ஆகியவை பகுப்பாய்வு செய்துள்ளன" என்கிறார் சண்முக சுப்ரமணியன்.

"டெக்ஸ்ட் ஒன்லி ரீடர் என்ற ஆப் ஒன்றையும் உருவாக்கியுள்ளேன். இணையதளத்திற்கு செல்லாமலேயே எழுத்துகளை வாசிக்க உதவுவதுதான் "டெக்ஸ் ஒன்லி ரீடர்". நீங்கள் தேடும்போது இந்த எழுத்துகளை இது காட்டும்" என்றும் தெரிவித்தார் அவர்.

- BBC - Tamil

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்