10-வது ஐபிஎல் தொடரில் சாதனை.. கடைசியில் சொதப்பிய பொல்லார்டு: கட்டிப்பிடித்து கொண்டாடிய பிரீத்தி ஜிந்தா

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் பொல்லார்டு சொதப்பியதால் பஞ்சாப் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான 51-வது லீக் போட்டி மும்பை வானகடே மைதானத்தில் நடைபெற்றது. இதன்படி நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச தீர்மானித்தது.

இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு மார்ட்டின் கப்தில், சகா ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

கப்தில் 18 பந்தில் 36 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அசுர வேகத்தில் ஓட்டங்களை குவித்தார்.

அவர் 21 பந்தில் இரண்டு பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 47 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் விகிதம் 10-ஐ தாண்டிச் சென்றது.

ஒருபுறம் முக்கியமான இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சகா தொடர்ந்து அதிரடி காட்டினார்.

அவருக்குத் துணையாக ஷேன் மார்ஷ் 16 பந்தில் 25 ஓட்டங்களும், அக்சார் பட்டேல் அவுட்டாகாமல் 13 பந்தில் 19 ஓட்டங்களும் சேர்த்தனர்.

சகா 55 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 93 ஓட்டங்கள் குவித்து ஆட்மிழக்காமல் குவிக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை அணி சார்பில் மெக்கினகன் 4 ஓவரில் 54 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்துவதற்கு மும்பை அணி சார்பில் துவக்க வீரர்களாக சிம்மன்ஸ் மற்றும் பார்தீவ் பட்டேல் களமிறங்கினர்.

கடிமான இலக்கு என்பதால் இருவரும் ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை காட்டத் துவங்கிவிட்டனர். இதனால் மும்பை அணியின் ரன் விகிதம் மளமளவென எகிறியது.

அணியின் எண்ணிக்கை 99 இருந்த போது பட்டேல் 38 ஓட்டங்களுடன் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரானா 12 ஓட்டங்கள், அணியின் தலைவர் ரோகித் சர்மா 5 ஓட்டங்கள் என அடுத்தடுத்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இருந்த போது மற்றொரு துவக்க வீரரான சிம்மன்ஸ் தனது அதிரடியை நிறுத்தாமல் ஆடிக்கொண்டிருந்தார். அவரும் அரை சதம் கடந்து 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின் வரிசையில் களமிறங்கிய பொல்லார்டு மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களை கதற வைத்தனர்.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெறும் என்பது போய், மும்பை அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா மும்பை அணி 176 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு கூடியது.

யார் வெற்றி பெறுவார் என்பது போல் மதில் மேல் பூனையாக இருந்தது. இறுதி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை பஞ்சாப் அணி சார்பில் மோகித் சர்மா வீசினார். முதல் பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு அதை சிக்ஸருக்கு அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து 4 பந்துக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு ஸ்டிரைட் திசையில் அடித்து ஆட ஆனால் அது பீல்டருக்கு நேரே சென்றதால் இரண்டு ஓட்டங்கள் எடுக்க முடியாது என்று நின்று விட்டார்.

இதனால் மூன்று பந்துக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தை சர்மா அற்புதமான யார்க்கர் மூலம் ஓட்டம் எதுவும் எடுக்க விடாமல் ஆக்கினார். இதைத் தொடர்ந்து 5-வது பந்தையும் பொல்லார்டு மிஸ் செய்ததால், பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது.

கடைசி பந்திலும் ஒரு ஒட்டம் எடுத்து பொல்லார்டு சொதப்பா, பஞ்சாப் அணி 7-ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா அருகில் இருந்த தன் நண்பர்களை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் 230 ஓட்டங்கள் குவித்த பஞ்சாப் அணி பத்தாவது ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மும்பை அணி 223 ஓட்டங்களும், டெல்லி அணி 214 ஓட்டங்களுடன் உள்ளன.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments