36 வயதிலும் கூட பாய்ந்து சென்று பந்தை பிடித்த இந்திய வீரர்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

உள்ளூரில் நடைபெற்று வரும் முஷ்டாக் அலி தொடர் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யூசுப் பதான் அசாத்தியமாக கேட்ச் பிடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒவ்வொரு உள்நாட்டு போட்டிகளையும் இளம் வீரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயற்சித்து வருகின்றனர். இந்திய அணிக்கு தேர்வாகும் ஆசையில், முடிந்த வரையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துகின்றனர்.

இவர்களை போலவே இந்திய அணியில் நிராகரிக்கப்பட்ட வீரர்களும், உள்ளூர் போட்டிகளில் தங்களுடைய அற்புதமான திறமையை வெளிப்படுத்தி மீண்டும் அணியில் இணைய முயற்சிக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நடைபெற்று வரும் 2019-20ம் ஆண்டிற்கான சையத் முஷ்டாக் அலி தொடரில், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யூசுப் பதான் தனது கூர்மையான பீல்டிங் திறன்களைக் வெளிக்கொணர்ந்து கவனத்தை பெற்றுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று கோவா மற்றும் பரோடா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் போது, அதிரடியாக 18 பந்துகளில் 27 ரன்கள் அடித்த தர்ஷன் மிசால் கேட்சை யூசுப் பதான் அசாத்தியமாக பாய்ந்து பிடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கேட்ச் பிடிக்கும் வீடியோ காட்சியினை அவரது சகோதரரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக 36 வயதான யூசுப் பதான் 2007ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடினார் என்பதும், அதன்பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்