இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இறுதி போட்டி! கோப்பையை வெல்ல போவது யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறவுள்ள நிலையில் தொடரை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசமும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்றிரவு இந்திய நேரப்படி 7 மணிக்கு நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கிலும், கடைசிகட்ட பந்து வீச்சிலும் கோட்டை விட்ட இந்திய அணி 2-வது ஆட்டத்தில் சுதாரிப்போடு விளையாடி வெற்றிக்கனியை பறித்தது.

அணித்தலைவர் ரோகித் சர்மா 6 சிக்சருடன் 85 ரன்கள் குவித்து அசத்தினார்.

யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் சுழலில் மிரட்டினர். இன்றைய ஆட்டத்திலும் அதே உத்வேகத்துடன் ஆடி தொடரை வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளனர்.

இரண்டு ஆட்டங்களிலும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியுள்ளார். அனேகமாக இந்த ஆட்டத்தில் அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்முதுல்லா தலைமையிலான வங்கதேச அணி முதல் ஆட்டத்தை போன்று மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வேட்கையுடன் காத்திருக்கிறது.

மொத்தத்தில் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers