நாங்கள் Brexit-க்கு தயாரில்லை! சுங்க அலுவலர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்துப்போன பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டுக்குப்பின் நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று காட்டுவதுபோல், சுங்க அலுவலர்களின் போராட்டத்தால் பிரான்சின் கலாயிஸ் பகுதியில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

திங்களன்று ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் இறங்கிய சுங்கத்துறை அலுவலர்கள், இம்மாத இறுதியில் பிரெக்சிட் நிறைவேற இருப்பதையொட்டி, சாலை போக்குவரத்தில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் நிலைமை எப்படியிருக்கும் என்பதை கண்முன் காட்டினர்.

சுங்கத்துறை ஏஜண்டுகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட சோதனைகளை மேற்கொள்வதால், மிகக் குறைந்த நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போக்குவரத்து யூனியனைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இம்முறை சுங்கத்துறை ஊழியர்கள் வித்தியாசமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர், வேலை நிறுத்தம் செய்வதற்கு பதிலாக, ஒவ்வொரு வாகனத்தையும் நீண்ட நேரம் சோதிக்கும் நடைமுறையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

தாங்கள் பிரெக்சிட்டுக்கு தயாரில்லை என்னும் செய்தியை பிரான்ஸ் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று யூனியனைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

எங்கள் வேலைச்சூழல் எப்படி மோசமாகிக் கொண்டு வருகிறது என்பதையும், பிரெக்சிட்டுக்குப்பின் அது இன்னும் எப்படி மோசமடையும் என்பதையும் காட்டுவதே எங்கள் நோக்கம் என்றார் அவர்.

நாங்கள் இன்னும் பிரெக்சிட்டுக்கு தயாரில்லை, கடினமான மற்றும் ஒப்பந்தங்கள் அற்ற ஒரு பிரெக்சிட்டுக்குப்பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அதற்காக நாங்கள் தயாராக வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

மேலும் 700 சுங்க அலுவலர்களை வேலைக்கு எடுப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்று சில யூனியன்கள் கருதுகின்றன.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறியபின், கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும், அது எப்படி இருக்கும் என்பதை இன்று கண்ணால் காண்கிறோம் என்கிறார் இன்னொரு யூனியனைச் சேர்ந்த ஒருவர்.

ஆனால், அதே நேரத்தில் கலாயிஸ் சுங்க சேவைகளின் தலைவரான Rodolphe Gintz, இந்த போராட்டத்திற்கும் பிரெக்சிட்டுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்.

பிரெக்சிட்டுக்குப்பின் இப்படி நடக்காது, நாம் ஒன்றும் ஒவ்வொரு ட்ரக்கையும் இப்படி சோதிக்கப்போவதில்லை என்று கூறும் அவர், உண்மையில் எல்லைக்கு மறுபுறம்தான் ட்ரக்குகள் வரிசைகட்டி நிற்கப்போகின்றன, அதாவது பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்குள் வரும் வாகனங்கள்தான் கடும் சோதனைக்குட்படுத்தப்பட இருக்கின்றன என்கின்றார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers