ஜேர்மனியில் சட்ட விரோத அகதிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட குறைவு: ஆய்வு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கடந்த ஆண்டு புகலிடம் தொடர்பாக பல ஊழல்கள் நடைபெற்ற நிலையிலும், ஜேர்மனியில் சட்ட விரோதமாக புகலிடம் பெறுவோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட குறைவாகவே இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2018ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 43,000 புகலிடக் கோரிக்கைகளை ஆய்வு செய்ததில் 0.7 சதவிகிதம் மட்டுமே சட்ட விரோத குடியேற்றங்கள் இருந்ததாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளிவிவரங்களை பார்க்கும்போது புகலிடம் தொடர்பாக நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் பெரிது படுத்தப்பட்டதாகவே தோன்றுவதாக Die Linke கட்சியைச் சார்ந்த Ulle Jelpke என்னும் அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான ஃபெடரல் அலுவலகத்தில் பெருமளவில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகவும், புகலிடம் கோருவோர் போலியான அடையாளங்களைக் காட்டியும் தவறுதலாக அவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டதாகவும் அரசியல் காரணங்களுக்காகவே ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் எதுவும் உண்மையில்லை என்று கூறும் Ulle Jelpke, சிலரது விடயத்தில் சட்ட விரோதமாக புகலிடக் கோரிக்கைகள் நிராகரிகப்பட்டதுதான் உண்மை என்கிறார்.

புகலிடம் வழங்கும் அதிகாரிகளை அசௌகரியமாக உணர வைக்கும் வகையில் நடைபெற்ற சில ஊழல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

2017ஆம் ஆண்டு ஜேர்மனி ராணுவத்திலுள்ள Franco A என்னும் ஒரு ராணுவ வீரர் ஒரு சிரிய அகதியை போல நடித்து வெற்றிகரமாக புகலிடத்திற்காக பதிவு செய்தார், அவர் ஒரு வார்த்தை கூட அரபி மொழியில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் சில அரசியல்வாதிகளின் ஆதரவையும் மறுபக்கம் சில அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தாலும் அவர் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக அப்போதைய உள் துறை அமைச்சரான Thomas de Maizière 100.000 புகலிட சம்பவங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு சம்பவத்தில் புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான ஃபெடரல் அலுவலகத்தில் Bremen கிளையின் தலைவர் சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கைகள் பெறுவதை எளிதாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அதனால் மீண்டும் ஒரு முறை 20,000 புகலிட சம்பவங்களை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்