இந்தியாவில் மாயமான ஜேர்மன் யுவதி தொடர்பில் சகோதரி வெளியிட்ட முக்கிய தகவல்: நடந்தது என்ன?

Report Print Arbin Arbin in ஜேர்மனி

இந்தியாவின் கேரள மாநிலத்திற்கு சென்ற பின்ன மாயமான ஜேர்மன் யுவதி தொடர்பில் அவரது சகோதரி கரோலின் முக்கிய தகவல்கள் பலவற்றை முதன் முறையாக பகிர்ந்துள்ளார்.

மாயமான தமது சகோதரி லிஸா வெயிஸ் மன அமைதி தேடியே கேரளா சென்றுள்ளார் எனவும், அவருடன் சென்ற நண்பர் தொடர்பில் தமக்கு உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை என கரோலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் வைத்து கொல்லப்பட்ட லாத்விய யுவதியின் சகோதரியுடன் மேற்கொண்ட உரையாடலிலேயே கரோலின் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

கரோலினுடன் உரையாடிய இல்லீஸ் என்பவர், கேரளாவில் உள்ள தமது தோழர்கள் உதவியுடன் மாயமான லிஸா தொடர்பில் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

லிஸா சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளார். தொடர்ந்து இஸ்லாமிய புனித தலங்களை தரிசிக்கும் பொருட்டு அவர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே எகிப்து தலைநகர் கெய்ரோவில் வைத்து தமது வாழ்க்கை துணையை சந்தித்து, திருமணமும் செய்து கொண்டார்.

கணவருடன் அதன் பின்னர் அமெரிக்காவில் குடியேறிய லிஸாவுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அமெரிக்காவில் இருந்து லிஸா பெர்லின் பகுதியில் குடிபெயர்ந்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டு காலம் பெர்லின் மற்றும் ஸ்வீடனில் லிஸா குடியிருந்து வந்துள்ளார். மட்டுமின்றி தமது இரு பிள்ளைகளையும் கணவருடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவங்கள் அனைத்தும் லிஸாவுக்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கரோலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே மன நிம்மதி தேடி லிஸா இந்தியா சென்றுள்ளார். அங்குள்ள மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார். லிஸாவுடன் பிரித்தானியரான நண்பர் ஒருவரும் இந்தியா செல்ல இருப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதை கரோலின் நினைவு கூர்ந்துள்ளார்.

மார்ச் 6 ஆம் திகதி லிஸா தமது பிரித்தானியா மற்றும் ஸ்வீடன் நண்பர்கள் இருவருடன் இந்தியா சென்றுள்ளார். மார்ச் 10-ஆம் திகதி லிஸா தம்மை தொலைபேசியில் அழைத்ததாக கூறும் கரோலின்,

இந்தியாவில் தாம் இருப்பதாகவும், சில நாட்கள் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் தங்க முடிவு செய்துள்ளதாகவும், கூடவே பிரித்தானியா மற்றும் ஸ்வீடன் நண்பர்கள் இருவர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவே லிஸா கடைசியாக குடும்பத்தாருடன் மேற்கொண்ட இறுதி தொலைபேசி அழைப்பு என கரோலின் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் 3 வாரங்கள் லிஸாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என அறிந்த நிலையில், ஜேர்மன் தூதரகம் மூலம் அவர் அந்த ஆசிரமத்தில் விசாரித்தபோது போதிய தகவல் கிடைக்கவில்லை என கரோலின் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்தே தூதரகம் மூலம் டெல்லிக்கும் கேரள அரசுக்கும் புகார் ஒன்றை கரோலின் அளித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இல்லீஸ் கேரள காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை தொடர்பு கொண்டு உதவி கோரி வருகிறார்.

தமது சகோதரிக்கு ஏற்பட்ட கொடூர நிலை வேறு எந்த பெண்ணுக்கும் வர வேண்டாம் என இல்லீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...