பிரியங்கா வழக்கில் என் கவுண்டர் செய்த பொலிசாருக்கு பிரச்சனை! அதனால் அவர்களுக்கு நேரப்போகும் கதி என்ன?

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான நால்வர் என் கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் தீவிரமாக விசாரிக்க களம் இறங்கியுள்ளன.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி (26)-ஐ பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேஷவலு ஆகியோர் நேற்று என் கவுண்டரில் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

தங்களை நோக்கி நால்வரும் தாக்கியதால் வேறு வழியின்றி என் கவுண்டர் செய்ததாக பொலிசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த என் கவுண்டருக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் வேண்டுமென்றே நால்வரையும் பொலிசார் திட்டமிட்டு சுட்டனர் என சமூகவலைதளங்களில் சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பொலிசார் மேற்கொண்ட என் கவுண்டருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்த எங்கள் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

விரைவில் அவர்கள் இது தொடர்பில் அறிக்கை வெளியிடுவார்கள், இந்த என் கவுண்டருக்கு கண்டனம் தெரிவித்து கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசியல், தேர்தல், மாநில கொள்கையில் அடிப்படை சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் இருக்கும் அமைப்பான Foundation for Democratic Reforms அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், நீதித்துறைக்கு புறம்பான கொலைகள் அப்பாவி மக்களை பலியாக்கும் செயலாக மாறிவிடும்.

இது போன்ற கொடூர செயல்களுக்கு சட்டப்படி சரியான தண்டனை வாங்கி தர வேண்டும், இது போன்ற என் கவுண்ட்டர்கள் தீர்வாகாது என கூறியுள்ளார்.

Human Rights Forum வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பேரை சுட்டு கொன்ற பொலிசாரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.

மேலும் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், ஏனெனில் இந்த விடயத்தில் தெலுங்கானா பொலிசார் நியாயமாக நடந்து கொள்வார்கள் என நம்ப முடியாது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொலிசாரை வைத்து கொலை செய்வது நிச்சயம் நிரந்தர தீர்வை தராது என கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் உள்ளிட்ட ஆணையத்தின் இந்த செயல்பாடுகள் என் கவுண்டரில் ஈடுபட்ட பொலிசாருக்கு தலைவலியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்