வீடியோ அழைப்பில் காட்டப்பட்ட கணவன் சடலம்! பார்த்து கதறி அழுத மனைவி மற்றும் மகள்... புகைப்படத்துடன் கண்ணீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளியின் உடல் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில் அவரின் இறுதிச் சடங்கை மனைவி மற்றும் மகள் வீடியோ காலில் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தங்கள் அன்றாடத் தேவைக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வட மாநிலத்திலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பரகான்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆசாத் (52) என்பவர் திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். அவர், மாரடைப்பு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாததால் திருப்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கத்தை வடமாநிலத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் மகள் வீடியோ கால் மூலம் பார்த்து கண்ணீர் சிந்தி வேதனை அடைந்தனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் மாவட்டச் செயல் தலைவர் முன்னா கூறியதாவது, ஆசாத் காஜி. கடந்த சில ஆண்டுகளாக தனது அண்ணன் மகன் சதாம் உசேனுடன் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஏற்கனவே உடலில் பிரச்னைகள் இருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அமைப்பு சார்பில் மேற்குவங்கத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் தகவல் அளிக்கப்பட்டது.

மேலும், அவரது உடலை மேற்குவங்கம் கொண்டு செல்ல போதிய பணம் மற்றும் வசதியில்லாத காரணத்தால் திருப்பூரில் எஸ்.ஏ.பி அருகில் உள்ள பள்ளிவாசல் அருகில் ஆசாத்தின் உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆசாத்தின் சடலத்தை அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோ அழைப்பின் மூலம் மேற்குவங்கத்தில் உள்ள அவரது மனைவி பூட்டி பீவி மற்றும் மகளுக்குக் காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுதனர் என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்