சென்னையில் ஐபிஎல் ரசிகர்களை கண்காணிக்க ரகசிய கமெராக்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காணவரும் ரசிகர்களை கண்காணிக்க ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் போராட்டத்தை திசை திருப்பும் என கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, தமிழகத்தில் எங்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது எனவும் அனைத்து தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களை கண்காணிக்க ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கருப்பு நிற உடை, பேட்ஜ் அணிந்து வருபவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று சென்னை வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுதியைச் சுற்றிலும் உதவி ஆணையர் தலைமையில் 60 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தொண்டர்கள் ரசிகர்கள் போல் மைதானம் உள்ளே சென்று முற்றுகையிடுவர் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

CSK

இது குறித்து அவர் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவே சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடத்தப்படுகிறது.

ஐ.பி.எல் போட்டி செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறக்கூடாது. அதனை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், போட்டியை நிறுத்த மைதானத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம்.

தொண்டர்கள், ரசிகர்கள்போல் மைதானம் உள்ளே சென்று முற்றுகையிடுவர், சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இதனையும் மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்துவோம்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு, கூடுதல் ஆணையர் சாரங்கன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்