பிரெக்சிட்: தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை... போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
386Shares

பிரெக்சிட் தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் காணப்படாததால், ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி வெளியேறப்போவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரெக்சிட் மாற்றக்காலம் 2020 டிசம்பர் 31உடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்தகட்டமாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் என்ன விதத்தில் உறவு அமையும் என்பதை முடிவு செய்யும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடித்தல், வர்த்தகம் தொடர்பான ஒரேவித விதிகள் மற்றும் விதிகள் மீறப்படும்நிலையில், அதை ஐரோப்பிய ஒன்றியம் தண்டிக்கும் உரிமை முதலான பிரச்சினைகள்தான் இப்போது பெரும் பிரச்சினைகளாக உள்ளன.

தன் நாட்டு மக்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், மீன்பிடித்தல் விடயத்தில் எந்த சமரசத்துக்கும் உடன்படமாட்டேன் என அடம்பிடிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தனக்கு ஒத்தாசையாக ஜேர்மனியையும் இழுக்கிறார்.

பிரித்தானியாவும் தன் பங்குக்கு, தனது உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டேன் என அடம்பிடிக்க, ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் Michel Barnier என்பவரும், பிரித்தானியா சார்பில் David Frost என்பவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அப்படி எந்த முடிவும் எட்டப்படாவிட்டால், ஐரோப்பிய ஒற்றைச் சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தங்கள் எதுவுமின்றி வெளியேற தயார் என போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளதாக பிரித்தானிய கேபினட் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்று, ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாவிட்டால், பிரித்தானியாவும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மருந்துகள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, உணவுப்பொருட்களின்விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், தீவிரவாத அச்சுறுத்தல், மீனவர்களுக்குள் மோதல், எல்லையில் கூட்டமும் குழப்பமும் மற்றும் வரிகள் என பல பிரச்சினைகளை பிரித்தானியா எதிர்கொள்ள நேரிடும் என லீக்கான முக்கிய பிரித்தானிய அரசு ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், உள்ளூர் நேரப்படி இன்று மாலை போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der Leyenஉடன் தொலைபேசியில் நடத்த உள்ள பேச்சு வார்த்தைகளிலிருந்துதான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்