கையில் குழந்தையுடன் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவில்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பிறந்து ஏழே வாரங்கள் ஆகி, தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த குழந்தையுடன் மணப்பெண்ணாக தேவாலயம் ஒன்றில் நடைபோட்டார் ஒரு இளம்பெண்.

வட கரோலினாவைச் சேர்ந்த Amanda Withrow (27), தனது காதலரான Edwin Acevedoவை தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

ஆனால் 30 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

ஜூன் மாதம் 14ஆ திகதி, வெறும் மூன்று பவுண்டுகள் எடையுடன் 17 இன்ச் நீளத்தில் குட்டியாக குறைப் பிரசவத்தில் பிறந்தான் Oliver Grey.

குழந்தை பிறந்தபின், உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என, தங்கள் குடும்ப ஆலோசகரான Mallory Magelliயிடம் கூறியுள்ளார் Amanda. ஆனால் Magelli வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார்.

அவர் Amandaவின் குடும்ப ஆலோசகர் மட்டுமல்ல, Amanda அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலுள்ள சிற்றாலயம் ஒன்றின் பாதிரியாரும் ஆவார்.

Amandaவின் குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனையிலுள்ள தேவாலயத்திலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என Magelli ஆலோசனை கூற, அனைவருக்கும் அந்த திட்டம் பிடித்துப்போனது. சரி, குழந்தையை தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து கொண்டுவர மருத்துவர்கள் அனுமதிக்க வேண்டுமே!

அனுமதிக்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை என்றார் கைக்குழந்தைகள் நல மருத்துவர் Dr Stephen DeMeo.

அது என்ன என்றார்கள் குழந்தையின் பெற்றோர். என்னையும் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்றார் Stephen சிரித்துக் கொண்டே.

நர்ஸ்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் தேவாலயத்தை அலங்கரிக்க, கையில் குழந்தையுடன் மணப்பெண் உடையுடன் நடைபோட்டார் Amanda.

மருத்துவமனை ஊழியர்கள், அவர்களது உறவினர்கள் என பெரிய கூட்டத்தின் முன் சட்டப்படி கணவன் மனைவியானார்கள் Amandaவும் Edwinம்.

அந்த அழகான திருமண வைபவத்தின்போது, அந்த தேவாலயத்தில் வீற்றிருந்த ஒருவர் கூட கண் கலங்காமலில்லை.

திருமணம் குறித்த செய்தியையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் Magelli பதிவேற்றம் செய்ய, அமெரிக்கா முழுவதிலுமிருந்து தம்பதிக்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்களும், இந்த திட்டத்துக்கு காரணமாக இருந்த Magelliக்கு பாராட்டுகளும் குவிகின்றன.

Oliver Grey மகிழ்ச்சியாகவும், நன்றாகவும் இருக்கிறானாம், விரைவில் வீடு திரும்ப உள்ளானாம்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers